Published : 20 Oct, 2023
Last Updated : 20 Oct, 2023
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் இன்று (20-ம் தேதி) செல்போன்களுக்கு சோதனைக்காக பேரிடர் கால எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல் படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்கும் நோக்கத்துக்காக இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் இன்று (20-ம் தேதி) செல்போன்களுக்கு மாதிரி சோதனையாக பேரிடர் கால எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட உள்ளது.
இந்த எச்சரிக்கை செய்தி தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இந்த செய்திக்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கை தகவல்களை வழங்குவது ஆகிய நோக்கங்களுக்காகவே இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது.